

நாகர்கோவில்,
நாட்டு மக்களை கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு தமிழகத்திலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் சார்பில் விழிப்புணர்வு பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. தீயணைப்புத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை, குலசேகரம், குளச்சல், கொல்லங்கோடு ஆகிய 7 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையங்கள் சார்பில் அதனதன் எல்கைக்கு உட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இதில் பெரிய தீயணைப்பு வாகனங்கள் 10-ம், சிறிய தீயணைப்பு வாகனம் ஒன்றுமாக மொத்தம் 11 வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் 3 பெரிய வாகனங்களும், ஒரு சிறிய வாகனமும் மருந்து தெளிப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றன. நேற்றும் இந்த பணி நடந்தது.
மாவட்டம் முழுவதும் 12 பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டது. நாகர்கோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் சுசீந்திரம், தேரூர், மருங்கூர், புத்தளம் ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், ராஜாக்கமங்கலம், மேலசங்கரன்குழி, தர்மபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் 45 பகுதிகளில் இந்தப் பணிகள் நடந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு கூறியதாவது:-
தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நேற்று 13 இடங்களிலும், நேற்று முன்தினம் 16 இடங்களிலும், 28-ந் தேதி 9 இடங்களிலும், 27-ந் தேதி 7 இடங்களிலும் என 4 நாட்களில் 45 இடங்களில் மருந்து தெளிப்பு பணி நடந்துள்ளது. மொத்தம் 11 வாகனங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மருந்துகளை அந்தந்த பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கொடுத்து விடுகிறார்கள்.
சோடியம் ஹைபர்பெராக்சைடு (லைசாலுடன் தண்ணீர் கலந்தது), சோடியம் ஹைப்போகுளோரைடு (பிளச்சிங்பவுடருடன் தண்ணீர் கலந்தது) ஆகிய கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மாநகராட்சி பகுதிகளில் தேவைப்படும் இடங்களிலும், அரசு போக்குவரத்து பணிமனைகள் போன்றவற்றிலும் நாங்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறோம். மேலும் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் ஒரு தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தினமும் 10 பேர் வீதம் 7 தீயணைப்பு நிலையம் சார்பில் 70 ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்து வருகிறோம். மேலும் சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளான ஆடு, மாடுகள், நாய்கள் போன்றவற்றுக்கும் உணவு அளித்து வருகிறோம்.
இவ்வாறு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு கூறினார்.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தனியாக மாநகராட்சி பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. வெட்டூர்ணிமடம் கிறிஸ்தவ ஆலயம், வடசேரி மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றில் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இதுதவிர தெருக்களிலும், மக்கள் கூடும் சந்தைப் பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி நடந்தது.