தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதத்தை தாண்டி உள்ளது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதத்தை தாண்டி உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதத்தை தாண்டி உள்ளது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
Published on

கடத்தூர்,

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து உலக விண்வெளி வார விழாவை கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக நடத்தியது. நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விண்வெளி மையம் குறித்த கேள்விகளுக்கு சரியான முறையில் விடையளித்த 300 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 70 இடங்களில் விண்வெளி மைய வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோபி கலை அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் கண்காட்சி நடைபெற்று உள்ளது. இந்த கண்காட்சியை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகள் வியக்கும் அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைந்து உள்ளது. படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதத்தை தாண்டி உள்ளது.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடுகளுக்குச் சென்று உலக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 413 கோடிக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்துள்ளார். இதன் மூலம் இங்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், கோபியில் விரைவில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக மாணவர்களிடம் தான் ஆற்றலும், திறமையும் அதிகம் உள்ளது.

இந்த அரசு கையேந்தாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் அரசாக உள்ளது. தமிழக கல்லூரி மாணவர்கள் 100 பேர், மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் 100 பேர் என மொத்தம் 200 பேர்களை தேர்வு செய்து ஸ்ரீஹரிகோட்டா வின்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் சென்று பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

உலக மக்கள் தொகையில் இந்தியா 2-வது இடத்தை வகிக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 18 சதவீதமாகும். ஆனால், நிலத்தில் 2 சதவீதமும், நீரில் 4 சதவீதமும் தான் உள்ளது. இதுமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபர் வருமானத்தில் இந்தியா 142-வது இடத்தைப் பெற்றுள்ளது. அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க முன்வரவேண்டும். மத்திய மாநில அரசுகள் கல்விக்காக 3.8 சதவீத தொகையை மட்டுமே ஒதுக்கி உள்ளது. அதை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். இந்தியா முழுவதும் நீட் தேர்வை 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால், 50 ஆயிரம் பேருக்கு மட்டும் மருத்துவத்துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த இடப்பற்றாக்குறையை போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செந்தில்குமார், பொங்கியணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கல்லூரி தலைவர் கருப்பணன், செயலாளர் தரணீதரன், கல்லூரி முதல்வர் தியாகராசு, கல்லூரி டீன் செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்ற ஈரோடு செங்கோடம்பாளையம் அரசு பள்ளி 7-ம் வகுப்பு மாணவி வினோதா, மற்றும் கோபி சி.கே.கே. மெட்ரிக் பள்ளி 12-ம்வகுப்பு மாணவி மஹிமா சுவேதா ஆகிய இருவரும் அடுத்த விண்கலம் ஏவும்போது நேரில் பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாராட்டி பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com