ஒகேனக்கல் வனப்பகுதியில் பெண் யானை சாவு

ஒகேனக்கல் வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்தது.
ஒகேனக்கல் வனப்பகுதியில் பெண் யானை சாவு
Published on

பென்னாகரம்,

கர்நாடக வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 100-க்கும் மேற்பட்ட யானைகள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி இந்த யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ஒகேனக்கல் மேற்கு பீட் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றது. இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை படி அந்த யானையை வனத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த யானையின் உடல் நிலை மோசமானதால் நடக்க முடியாமல் படுத்து கொண்டது. பின்னர் சிறிதுநேரத்தில் அந்த யானை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனஅலுவலர்கள், மாவட்ட வன அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் வனச்சரகர் கேசவன், கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் வனப்பகுதியிலேயே கால்நடை டாக்டர் மூலம் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குழிதோண்டி வனத்துறையினர் யானையின் உடலை புதைத்தனர். இந்த யானை வயிற்று போக்கால் இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் பெண் யானை இறந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com