வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,000-ஐ கடந்தது

வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் கொதிப்படைந்து உள்ளனர்.
வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,000-ஐ கடந்தது
Published on

பங்களூரு:வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் கொதிப்படைந்து உள்ளனர்.

சமையல் கியாஸ் சிலிண்டர்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஆரம்பத்தில் இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் என்ற அடிப்படையில் மாற்றியமைத்து வந்தன. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக உயர்ந்தது.

அதிரடி உயர்வு

வடமாநிலங்களான உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதேநேரம், வணிகப் பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 5 மாநில தேர்தல் முடிவடைந்ததுடன், ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்துவரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தின.

அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக அதிகரித்தது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் அதிரடியாக உயர்த்தின. இதன்படி, சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.1,015.50 ஆக உள்ளது. பெங்களூருவில் ரூ.952.50-க்கு விற்று வந்த சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.305 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பம் நடத்த முடியாத நிலை

விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொதிப்படைந்து உள்ளனர்.

பெங்களூரு ராஜாஜிநகரில் வசித்து வரும் சுவேதா என்பவர் கூறுகையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. கொரோனா காரணமாக மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்கிறது. இதனால் சாமானிய மக்கள் குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் உடனடியாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்றார்.

தேவகி என்பவர் கூறும்போது, நடுத்தர குடும்ப பெண்கள் மாதந்தோறும் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி வருகிறோம். மாதந்தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அதிகரித்து கொண்டே செல்கின்றனர். இதனால் சிலிண்டருக்கு என்றே ஒரு தொகையை ஒதுக்க வேண்டி உள்ளது. கியாஸ் சிலிண்டரை பார்த்து, பார்த்து உபயோகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

கண்ணீர் வருகிறது

சிக்கமகளூருவை சேர்ந்த லட்சுமி சோமசேகர் என்பவர் கூறுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிலிண்டர் ரூ.700-க்கு கிடைத்தது. தற்போது ரூ.1,000 ஆகிவிட்டது. இன்னும் எவ்வளவு விலை உயரும் என்று தெரியவில்லை. சாமானிய மக்களை பற்றி ஆட்சியாளர்கள் நினைத்து பார்ப்பதில்லை. அவர்கள் எங்களை நினைத்து பார்த்தால் சமையல் கியாஸ் விலையை உயர்த்த மாட்டார்கள். இது யாருக்கான அரசு என்பது தெரியவில்லை.

கொரோனாவால் மக்கள் அல்லல்படும் இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்துவதே குறைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com