விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை: வெடிகுண்டு பீதியால் வேலூரில் பரபரப்பு

விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால், பொதுமக்களிடையே வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை: வெடிகுண்டு பீதியால் வேலூரில் பரபரப்பு
Published on

வேலூர்,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து அண்டை நாடான இந்தியாவிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உளவுத்துறை எச்சரிக்கையின்படி சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னை அமிஞ்சிக்கரை பகுதியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு அதிகமான வடமாநிலத்தவர்கள் வருகின்றனர். நோயாளிகள் போர்வையில் நாச வேலையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வேலூரில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் வேலூர் நகரில் உள்ள அனைத்து விடுதிகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமால், அண்ணாதுரை, நந்தகுமார், புகழ், பெருமாள் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு விடுதிகளிலும் போலீசார் சென்று அங்கு தங்கி உள்ளவர்களின் விவரங்களை கேட்டறிந்தனர். முறையான ஆவணங்களை காண்பித்து அவர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் விசாரித்தனர். ஒரு சில குழுவில் வெடிகுண்டு நிபுணர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் அறைகளுக்கு சென்று உடைமைகளை சோதனை செய்தனர்.

மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது அறை வாடகைக்கு கேட்டு வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சி.எம்.சி. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை செய்தனர். மருத்துவமனைக்கு உள்ளேயும் சென்று சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை பொதுமக்களிடையே நேற்று வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது. மேலும் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com