கணவன், மனைவியை கட்டிப்போட்டு 150 பவுன் நகை கொள்ளை

கணவன், மனைவியை கயிற்றால் கட்டிப்போட்டு 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
கணவன், மனைவியை கட்டிப்போட்டு 150 பவுன் நகை கொள்ளை
Published on

பூந்தமல்லி,

திருவள்ளூர் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 69). தனியார் நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் ஆடிட்டராக இருந்து வருகிறார். இவருக்கு ரஜீதா (58) என்ற மனைவியும், லோகேஷ் குமார் (37), பிரதீப் (35) என்ற 2 மகன்களும் உள்ளனர். லோகேஷ்குமார் தந்தைக்கு உதவியாக ஆடிட்டர் வேலை செய்து வருகிறார். பிரதீப் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி ரஜீதாவுடன் தரைத்தளத்தில் தூங்கி கொண்டிருந்தார். மாடியில் லோகேஷ் குமார் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி அணிந்து வந்த 5 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் சமையலறையின் பூட்டை உடைத்து அதன்வழியாக படுக்கையறைக்கு சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

சத்தம்கேட்டு கணவன், மனைவி இருவரும் எழுந்தனர். அப்போது முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் 5 பேரும் கத்தி மற்றும் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி சத்தம்போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

அவர்கள் ராமச்சந்திரன், ரஜீதா இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகைகளையும், 15 கிலோ வெள்ளிப்பொருட்களையும், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 கைக்கெடிகாரங்களையும், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஐபேடையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 4 கெடிகாரங்களையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க மூக்கு கண்ணாடியையும் கொள்ளையடித்து மூட்டையாக கட்டினர். பின்னர் அவர்கள் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை திருடிக்கொண்டு அந்த காரிலேயே தப்பிச்சென்று விட்டனர்.

விடியற்காலையில் லோகேஷ்குமார் கீழே வந்த போது தனது தாய், தந்தையர் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நடந்த சம்பவத்தை அவர்கள் கூறியதை தொடர்ந்து வீட்டில் கொள்ளை போன சம்பவம் தெரியவந்தது.

இது குறித்து லோகேஷ் குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் டி.ஐ.ஜி. தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு ராமச்சந்திரன் குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறும்போது.

ஆடிட்டர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு போன வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக் கப்பட்டு உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடிபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com