ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஊருக்குள் விடக்கூடாது அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெண்கள் கோரிக்கை

புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஊருக்குள் விடக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நெடுவாசல் கிராம பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஊருக்குள் விடக்கூடாது அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெண்கள் கோரிக்கை
Published on

கீரமங்கலம்,
கீரமங்கலம் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமன் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறினார்கள்.

உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் நெடுவாசல் மேற்கு அண்ணாநகர் பகுதிக்கு குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் நெடுவாசல், அணவயல், கரம்பக்காடு, மாங்காடு, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 300 ரேஷன்கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் நிவாரண பொருட்களை பாதுகாப்பாக ஏற்றி வர உத்தரவிட்டார்.

தொடர்ந்து கஜா புயல் பாதிப்பால் தோப்புகளையும், மரங்களையும் இழந்து மன முடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி திருச்செல்வம் குடும்பத்தினர் அமைச்சரிடம் கருணை அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். திருச்செல்வத்தின் தந்தை மற்றும் மகன்கள், மகள் ஆகியோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மனு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மேடைக்கு செல்லும்போது, மேடையின் கீழே நின்ற நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த பெண்கள், அமைச்சரிடம் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை நெடுவாசல் பகுதிக்கு வராமல் தமிழக அரசு தடுத்தது. ஆனால் தற்போது புயலால் அத்தனை உடமைகளையும் இழந்து நிற்கிறோம். இந்த நிலையில் மீண்டும் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ஊருக்குள் விட்டுவிடாதீர்கள். மேலும் மரங்கள், விவசாயம், வீடுகளை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு அரசு உதவிகளை பெற்றுத்தர வேண்டும் என கைகளை கூப்பி கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய மண் காக்கப்படும். விவசாயிகள் மீண்டும் எழ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com