மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும் - சித்தராமையா பேச்சு

மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும் என்று வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது சித்தராமையா கூறினார்.
மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும் - சித்தராமையா பேச்சு
Published on

பெங்களூரு,

பெங்களூரு மத்திய நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ரிஸ்வான் ஹர்ஷத் போட்டியிடுகிறார். நேற்று அவரை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஜமீர் அகமது கான் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

அவர்கள் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிநகர் வார்டு, பின்னிப்பேட்டை, ஆசாத் நகர், சி.வி.ராமன் நகர், நாகவாரா, ஆவலஹள்ளி, மகாதேவபுரா ஆகிய இடங்களுக்கு கொளுத்தும் வெயிலில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ரிஸ்வான் ஹர்ஷத்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர். பின்னர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக எனது தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நடை மேம்பாலம், இந்திரா மலிவு விலை உணவகம், பெண்களுக்கு பி.யூ. கல்லூரி வரை இலவச கல்வி இப்படி பல்வேறு வசதிகளும், திட்டங்களும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால் பா.ஜனதா சார்பில் என்ன செய்து கொடுக்கப்பட்டது என்று கூறுங்கள் பார்ப்போம். இத்தொகுதி எம்.பி.யான பி.சி.மோகன் இதுவரை உங்களை(மக்களை) நேரில் சந்தித்து இருக்கிறாரா? சொல்லுங்கள் பார்ப்போம். மக்களுக்காக எதையும் செய்யாத பி.சி.மோகனை நீங்கள் தேர்தெடுக்க வேண்டுமா? அல்லது மக்களுக்காக பல திட்டங்களை செய்து வரும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி செய்த சாதனைகள் பூஜ்ஜியம் தான். அவர் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ததும், மங்கி பாத்தில் பேசியதும்தான் அவருடைய சாதனை. அதனால் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள்.

ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நாடு வளம் பெறும். கர்நாடகமும் வளர்ச்சி அடையும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com