நிரந்தரமாக மூடவில்லை என்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
நிரந்தரமாக மூடவில்லை என்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்
Published on

திருச்சி,

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சனேந்தல் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 10 பேர் கடுமையாக வெட்டி தாக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அங்குள்ள பிரச்சினை பற்றி புகார் செய்து உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சரியாக விசாரித்து நடவடிக்கை எடுக்காததால் தற்போது கலவரமாக மாறி இருக்கிறது. எனவே அந்த இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்து இருப்பது கண்துடைப்பு நாடகமாகும். ஸ்டெர்லைட் ஆலை இதற்கு முன் 6 முறை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூட்டுக்கு 2 துணை தாசில்தார்கள் உத்தரவிட்டதாக கூறப்பட்டு இருப்பது மாவட்ட உயர் அதிகாரிகளை தமிழக அரசு காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளாகும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவில்லை என்றால் நானே மக்களை திரட்டிசென்று நேரடியாக போராட்டம் நடத்துவேன். சட்டத்தால் முடியாததை மக்கள் போராட்டத்தால் செய்ய முடியும். தூத்துக்குடி பாணியில் மக்கள்மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர்ந்தால் தமிழக மக்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ஜூலை மாதம் 15-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு கட்சியினரையும், சமுதாயத்தினரையும் அழைப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் 150 கிராமங்களுக்கு சென்று கட்சி கொடியையும், சமுதாய கொடியையும் ஏற்றி வைத்து மாநாட்டிற்கு அழைப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறினார். உடன் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கடற்படைராஜன், செயலாளர் சக்திவேல் உட்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com