முகநூலில் படம் பதிவேற்றியதால்: தந்தை தற்கொலை, இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்

ராய்ச்சூர் அருகே முக நூலில் படம் பதிவேற்றியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர்கள் தாக்கியதில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த இளம்பெண்ணும் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டார்.
முகநூலில் படம் பதிவேற்றியதால்: தந்தை தற்கொலை, இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்
Published on

பெங்களூரு,

ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தாலுகா கவுடனபாவி கிராமத்தை சேர்ந்தவர் ராமனகவுடா(வயது 45). இவருடைய மகள் பசலிங்கம்மா(19). இந்த நிலையில், கடந்த மாதம் அந்த கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில், பசலிங்கம்மா பால்குடம் சுமந்து உள்ளார். இதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படமாக அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று பசலிங்கம்மா பால்குடம் சுமக்கும் படத்தை வாலிபர்கள் முகநூலில்(பேஸ்புக்) பதிவிட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த ராமனகவுடா அந்த வாலிபர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த வாலிபர்கள் ராமனகவுடாவை தாக்கியதாக தெரிகிறது. இதைப்பார்த்த கிராம மக்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனாலும், வாலிபர்கள் தனது மகளின் படத்தை முகநூலில் பதிவிட்டதை, தட்டிக்கேட்டபோது தன்னை தாக்கியது போன்ற சம்பவங்களால் ராமனகவுடா மிகவும் மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார்.

அவமானத்தால் துடித்த அவர் நேற்றுமுன்தினம் அதிகாலையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பசலிங்கம்மா கதறி அழுதார். மேலும், தனது தந்தை இறந்ததால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற பசலிங்கம்மா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பலகானூரு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ராமனகவுடா, பசலிங்கம்மா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகநூலில் படம் பதிவேற்றியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரே நேரத்தில் தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களின் குடும்பமும், அந்த கிராமமும் நேற்றுமுன்தினம் சோகத்தில் மூழ்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com