பெண்களுக்கு எதிரான குற்ற புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேச்சு

பெண்களுக்கு எதிரான குற்ற புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்ற புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேச்சு
Published on

குளித்தலை,


கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்பவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் தம்பதிகளுடன் வரும் அவர்களது குழந்தைகளின் நலனுக்காக அவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு பொருட்கள், குழந்தைகள் அடிப்படை கல்வியை அறிந்துகொள்ளும் வகையிலான புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வைத்துள்ள அறையை திறந்து வைத்தார்.

மேலும் அதே அறையில் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.


அதனை தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மகளிர் போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற புகார்களில் பெற்று முடிந்தவரை குடும்பங்களை சேர்த்து வைக்கின்றனர். அது முடியாத சூழலில் பெண்கள் பாதிக்கப்படும்போது குற்றம் செய்பவருக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அதற்குறிய தண்டனை பெற்று தரப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் பெண்களையும் அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார்களுக்கு இங்கு உரிய ஆலோசனை கொடுக்கப்படுகிறது. இதில் அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பல தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக உறுதியளித்து செல்கின்றனர். உண்மையில் அந்த தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்களா என்பது தெரியாது. போலீஸ் நிலையத்திற்கு வந்து சமாதானம் அடைந்த தம்பதிகள் சிலர் அதன்பின்னரும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது ஒருசிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.


போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களில் தம்பதிகளுக்கிடையே சரியான புரிதல் இல்லாத காரணத்தால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைக்காக புகார் அளிப்பவர்கள் 50 சதவிகிதம் பேரும், கணவர் மது அருந்திவிட்டு மனைவியை அடிப்பதால் ஏற்படும் பிரச்சினைக்காக புகார் அளிப்பவர்கள் 20 சதவிதம், மீதமுள்ள 30 சதவித புகார்கள், குழந்தையின்னை, மாமனார், மாமியார் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புகார் அளிக்கப்படுகிறது. குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. உரிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் தவறான முடிவுக்கு செல்கின்றனர்.

போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துவிட்டு பின்னர் சேர்ந்து வாழ்வதா கூறி செல்லும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதை உறுதிசெய்யும் வகையில், மாதம் ஒருமுறை அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து உறவை பலப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இந்த குடும்பவிழா நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பானுமதி, போலீசார் ராஜகோகிலாதேவி, ஜெயா, நீதிமன்ற குடும்பலநல ஆலோசகர் சின்னையன், வக்கீல்கள், மனநல, குழந்தைகள் நல ஆலோசகர்கள் மற்றும் தம்பதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com