

விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சமுத்து (வயது 53), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(37) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக மஞ்சமுத்துவிற்கும், ராமலிங்கத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமலிங்கம், மஞ்சமுத்துவை ஆபாசமாக திட்டி, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மஞ்சமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் மஞ்சமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் முன்விரோதத்தில் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சமுத்து, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்கலம்பேட்டை போலீசார், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.