

ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சீனிவாசாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன் (வயது 53). இவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் மருந்து விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோகன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார்.
விழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக் கப்பட்டு உள்ளே இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மோகன் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆண்டிப்பட்டி நகரில் சமீபகாலமாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.