ஆரணியில் பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய்-மகன் உள்பட 3 பேர் பலி மாடி வீடு தரைமட்டம்

ஆரணியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மாடி வீடு இடிந்து தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரணியில் பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய்-மகன் உள்பட 3 பேர் பலி மாடி வீடு தரைமட்டம்
Published on

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் சாலை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி முத்தாபாய் (வயது 60) பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். தண்டபாணி இறந்துவிட்டார். மீனா (15) என்பவரை முத்தாபாய் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். முத்தாபாய் தனது வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகிறார். மாடியில் சவரத்தொழிலாளியான ஜானகிராமன் என்பவர் தனது மனைவி காமாட்சி (38), மகன்கள் சுரேஷ் (15), ஹேம்நாத் (8) ஆகியோருடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

முத்தாபாய் வீட்டின் அருகே உள்ள வீட்டில் சந்திரா (50) என்பவர் தனது மகன் முத்துக்குமரன், மகள் எழிலரசி ஆகியோருடன் வசித்து வந்தார். முத்தாபாய் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சமையல் கியாஸ் கசிவு இருந்து வந்ததாகவும், இதுகுறித்து புகார் செய்தும் சரி செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சமையல் அறை முழுவதும் கியாஸ் பரவி உள்ளது. இதை கவனிக்காத முத்தாபாய் நேற்று காலையில் சமையல் அறையில் மின்விளக்கு போட்டுள்ளார். இதனால் குபீரென தீ பிடித்து வீடுமுழுவதும் எரியத்தொடங்கியது.

அப்போது சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் முத்தாபாய் வீடுமுழுவதும் தரைமட்டமானது. பக்கத்து வீடான சந்திரா வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. வீடுஇடிந்து விழுந்ததில் முத்தாபாய், மீனா, ஆகியோரும், மாடியில் வாடகைக்கு வசித்துவந்த ஜானகிராமன், காமாட்சி இவர்களுடைய மகன்கள் சுரேஷ், ஹேம்நாத் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்துவந்த சந்திரா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

பயங்கர சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது முத்தாபாய் வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. இடிபாடுகளுக்குள் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொருவராக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சந்திரா மீட்கப்பட்டார். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேபோன்று ஜானகிராமனின் மனைவி காமாட்சி அவரது மகன் ஹேம்நாத் ஆகியோர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டனர்.

படுகாயமடைந்த ஜானகிராமன் ஆரணி அரசு மருத்துவமனையிலும், அவருடைய மகன் சுரேஷ் மற்றும் முத்தாபாய், அவருடைய வளர்ப்பு மகள் மீனா ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முத்தாபாயின் பக்கத்து வீடுக்காரரான சதீஷ் என்பவருடைய வீடும் சேதம் அடைந்துள்ளது. சதீஷ் பால்விற்பனைக்காக வெளியில் சென்றிருந்தார். சதீஷின் அக்காள் வனமயில், அவரது கணவர் சரவணன், சதீஷின் மனைவி கவுரி, அவரது குழந்தைகள் கமலேஷ், சபரிவாசன், தமிழரசி ஆகிய 5 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அதேபோன்று முத்துக்குமரன், எழிலரசி ஆகியோரும் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்ததால் அவர்களும் காயமின்றி தப்பினர்.

விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட தடயவியல் நிபுணர்கள் பாரி, ஜேம்ஸ், ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி டவுன் போலீசில் முத்துக்குமரன், ஜானகிராமன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமையல் கியாஸ் வெடித்து வீடு இடிந்து தரைமட்டமான தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேர் இறந்த சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com