அரியாங்குப்பத்தில் சாலையை சீரமைக்க கோரி மறியல்

அரியாங்குப்பத்தில் சாலையை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடந்தது.
அரியாங்குப்பத்தில் சாலையை சீரமைக்க கோரி மறியல்
Published on

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் இருந்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலம் வரை சாலை சேதமடைந்து காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக தற்போது சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் சாலையை சீரமைக்காததை கண்டித்து பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதற்கு பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மண்டல அமைப்பாளர் சிவராமன், அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. பிரமுகர் நடராஜன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அரியாங்குப்பம் தொகுதி தலைவர் பாஸ்கர், எஸ்.டி.பி.ஐ. கட்சி சண்முகம், நகர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தலீத் மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்பட பல்வேறு சமூக அமைப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையை சீரமைக்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அரியாங்குப்பம் புறவழிச்சாலை சிக்னல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் 3 மாணவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தது போல் தங்களது கை, கால்களில் கட்டு போட்டப்படி கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மாணவர்களை வேடிக்கையுடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com