ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி மருந்து கட்டாயம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கிருமிநாசினி மருந்து கட்டாயம் வைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி மருந்து கட்டாயம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
Published on

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முக கவசம் அணிவதோடு, கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. எனவே, வங்கி, அரசு அலுவலகங்களுக்கு வருவோர் கைகளை சுத்தம் செய்யும் வகையில் கிருமிநாசினி மருந்து வழங்கப்படுகிறது. அவ்வாறு கிருமிநாசினி மருந்தால் கைகளை சுத்தம் செய்த பின்னரே அலுவலர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வங்கிகளை போன்று ஏ.டி.எம். மையங்களும் மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாக உள்ளது. ஏ.டி.எம். மையத்தின் கதவு மற்றும் எந்திரத்தில் பொத்தான்களை அனைவரும் தொட வேண்டியது இருக்கிறது. எனவே, அதன்மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க கைகளை சுத்தம் செய்யும் வகையில் கிருமிநாசினி மருந்து பயன்படுத்துவது அவசியம்.

ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கிகளுக்கு அருகே இருக்கும் ஏ.டி.எம். மையங்களை தவிர பிற மையங்களில் கிருமிநாசினி மருந்து வைப்பது இல்லை. இதனால் ஏ.டி.எம். மையங்களுக்கு வருவதற்கே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதற்கிடையே சென்னையில் ஏ.டி.எம். மையம் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கிருமிநாசினி மருந்து கட்டாயம் வைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் முன்பும், பணம் எடுத்த பின்பும் கிருமிநாசினி மருந்து மூலம் கைகளை பொதுமக்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com