பெங்களூருவில் பார்வையற்ற தம்பதியிடம் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது போலீசில் ஒப்படைத்து நாடகமாடியது அம்பலம்

பெங்களூருவில் பார்வையற்ற தம்பதியிடம் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சியில் குழந்தை கடத்தல் தொடர்பான செய்தி வெளியானதால் பயந்து, குழந்தையை போலீசில் ஒப்படைத்து நாடகமாடியது அம்பலமானது.
பெங்களூருவில் பார்வையற்ற தம்பதியிடம் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது போலீசில் ஒப்படைத்து நாடகமாடியது அம்பலம்
Published on

பெங்களூரு,

ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருடைய மனைவி ஜின்னா. இந்த தம்பதிக்கு கண்பார்வை கிடையாது. இவர்களுக்கு சாகர் என்ற 8 மாத மகன் உள்ளான். கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி பசவராஜ்-ஜின்னா தம்பதி தங்களது குழந்தையுடன் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்றனர். அப்போது, அங்கு வந்த ஒரு பெண், தம்பதிக்கு உதவி செய்வது போல் நடித்து குழந்தை சாகரை கடத்தி சென்றுவிட்டார்.

இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பார்வதம்மா என்ற பெண், சாகரை உப்பார்பேட்டை போலீசில் 2 நாட்களுக்கு பிறகு ஒப்படைத்தார். மேலும் கடத்தல்கார பெண், கெங்கேரி அருகே சாகரை விட்டு சென்றதால் அவனை மீட்டு போலீசில் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார். போலீசார் குழந்தையை மீட்டு பசவராஜ்-ஜின்னா தம்பதியிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தல்கார பெண் பற்றி விசாரித்து அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில், குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த பார்வதம்மா தான் சாகரை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது, பார்வதம்மா பெங்களூரு கெங்கேரியில் வசித்து கொண்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் திருமணம் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை. இதனால், அவர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார். இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி சித்ரதுர்காவில் இருந்து அவர் பஸ்சில் மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது தான் அவர் பசவராஜ்-ஜின்னா தம்பதியிடம் இருந்து குழந்தையை கடத்தி சென்றார்.

மேலும் வீட்டுக்கு சென்ற அவர் தனது தாய் சென்னபசவம்மா (55), சகோதரி லட்சுமி தேவி (35) ஆகியோரிடம், பஸ் நிலையத்தில் குழந்தையை தந்துவிட்டு கழிவறைக்கு சென்ற பெண் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் குழந்தையை எடுத்து வந்ததாக கூறினார். இதற்கிடையே, தொலைக்காட்சியில் குழந்தை கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்தவுடன் பார்வதம்மாவிடம் அவருடைய தாயும், சகோதரியும் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினர். அதன்படி, போலீசாருக்கு பயந்த பார்வதம்மா குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்து நாடகமாடியது தெரியவந்தது. இந்த நிலையில், கைதான பார்வதம்மாவுக்கு பெங்களூரு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com