கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
Published on

மும்பை,

மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவால் மும்பையே திருவிழா கோலம் காணும். குறிப்பாக சிலை கரைப்பின் போது லட்சக்கணக்கில் மக்கள் வீதிகளிலும், கடற்கரைகளிலும் காணப்படுவார்கள். சிலை ஊர்வலத்தை காண கோடி கண்கள் வேண்டும்.

அவ்வளவு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இந்த ஆண்டு வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. எனினும் கொரோனா பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை முதல்-மந்திரி அஜித்பவார், உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில் மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.

அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், சிலை ஊர்வலகத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது:-

கொரேனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியில் வர உள்ள விநாயகர் சதுர்த்தியை நாம் சமூக கடமைகளை மனதில் வைத்து அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்ப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். நோய் பரவாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா மதத்தினரும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மண்டல்கள் வைக்கும் விநாயகர் சிலைகளின் உயரம் 4 அடி வரையிலும், வீடுகளில் 2 அடி உயரம் வரை உள்ள சிலைகள் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.


கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சிலைகளை பிரதிஷ்டை செய்யவோ அல்லது கரைக்கவோ ஊர்வலமாக கொண்டு செல்ல கூடாது. மண்டல்கள் ஆன்லைனில் சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு மருந்து இன்னும் கிடைக்கவில்லை. எனவே முககவசம் அணிவதும், கைகளை சுத்தம் செய்வதும், ஒழுக்கத்தை கடைபிடிப்பதும் தான் தற்போது ஒரே தீர்வு.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்லக்கூடாது என்று முதல்-மந்திரி அறிவித்து இருப்பதால், இந்த ஆண்டு பிரமாண்ட சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலையுடன் எத்தனை பேர் செல்ல வேண்டும் என்ற விதிமுறையை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் சிலை கரைப்புக்காக கடற்கரைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் சமூகவலைதளங்களில் வெறுக்கத்தக்க வீடியோக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிக அளவு செயற்கை குளங்களை அமைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com