சென்னையில் கண்காணிப்பு கேமரா இல்லாத காலங்களில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் புதைக்கப்பட்ட வழக்குகள் பரபரப்பு தகவல்கள்

சென்னையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத காலங்களில் நடந்த பல கொலை வழக்குகளில் குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த வழக்குகள் புதைக்கப்பட்டன.
சென்னையில் கண்காணிப்பு கேமரா இல்லாத காலங்களில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் புதைக்கப்பட்ட வழக்குகள் பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை,

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் சென்னை மாநகரை கேமரா நகரமாக மாற்றியது அவரது சாதனையில் மைல் கல் ஆகும். லண்டன் மாநகரை போன்று, சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் சுமார் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் குற்றவாளிகள் புதுப்புது தொழில்நுட்பம் மூலம் குற்றங்களை அரங்கேற்றி வருகிறார்கள். போலீசாரும் அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுகின்றனர்.

இதில் கண்காணிப்பு கேமராக்களின் பங்கு அளப்பரியது. 3-வது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு உறுதுணையாக உள்ளன. பெருநகரை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பதால் நகரில் தற்போது நடைபெறும் குற்றவழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.

செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை, முக்கியமான கொலை வழக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளை காட்டிக்கொடுத்துவிடுகிறது. இதில் குற்றச்செயல்களும் பதிவாகி விடுவதால், குற்றவாளிகள் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருந்தும் தப்பித்து விட முடியாது.

சென்னை நகரில் கண்காணிப்பு கேமராக்கள் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் குடியேறி வருகின்றன. கண்காணிப்பு கேமரா இல்லாத காலங்களில் போலீசார் குற்றவாளிகளை தங்களது சாதுர்யத்தால் கண்டுபிடித்து வந்தனர். சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்தும் குற்றவாளிகளின் கைரேகையை வைத்தும், சம்பவம் நடந்த இடங்களில் கண்டெடுத்த தடயங்களை வைத்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து வந்தனர்.

போலீஸ் மோப்ப நாயும் இதற்கு பேருதவியாக இருந்தது. சம்பவம் நடந்த இடங்களில் கிடந்த சினிமா டிக்கெட்டுகள், குற்றவாளிகள் பயன்படுத்தும் துண்டு பீடிகளை வைத்துக்கூட குற்றவாளிகளை பிடித்ததாக வரலாறு உள்ளது.

சென்னை ராயபுரத்தில் நடந்த ஒரு கொலைவழக்கில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பேசும் ஏலே என்ற ஒரு வார்த்தையை குற்றவாளிகள் பயன்படுத்தியதை வைத்து போலீசார் அந்த வழக்கை துப்பு துலக்கியுள்ளனர்.

குற்றவாளிகள் செய்யும் குற்றத்தன்மையை வைத்தும் இந்த வழக்கில் இவர் தான் குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்து வந்தனர். உதாரணமாக ஹவுஷ்பாஷா என்பவர் பகல் நேரங்களில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் கைத்தேர்ந்தவர் ஆவார்.

அவருக்கு மாலைக்கண் நோய் என்பதால் இரவு நேரத்தில் அவர் திருடமாட்டார். பகல் நேரத்தில் பெரிய கொள்ளைச்சம்பவம் நடந்தால் போலீசார் உடனடியாக ஹவுஷ்பாஷாவை போய் பிடிப்பார்கள். கைரேகை பதியாமல் மறைத்தால் கூட பகலில் கொள்ளை நடந்தால் ஹவுஷ்பாஷா தான் குற்றவாளி என்பதை போலீசார் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத காலங்களில் இப்படி சாதுர்யமாக செயல்பட்டு போலீசார் குற்றவாளிகளை பிடித்து வந்தாலும், பல முக்கியமான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பல்வேறு வழக்குகள் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் புதைக்கப்பட்டு உள்ளன என்பதே வரலாறு.

சென்னை அமைந்தகரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி, 2 குழந்தைகள் உள்பட 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் போலீசார் எவ்வளவோ முயற்சித்தும், அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? குற்றவாளிகள் யார்? என்பதை துப்பு துலக்க முடியவில்லை.

4 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் கூட குற்றவாளிகள் யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னை நொளம்பூரில் சங்கீதா என்ற பல் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி யார்? என்றே தெரியவில்லை. அந்த வழக்கை கைவிட்டுவிட்டார்கள்.

சென்னை பாண்டிபஜார் பகுதியில் மலர்விழி என்ற பெண் கொல்லப்பட்டார். அவரது குழந்தையையும் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் குற்றவாளி பிடிபடவில்லை.

கோடம்பாக்கம் ஆசிரியர் காலனியில் வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண் ஒருவர் உடலில் மின்சாரம் பாய்ச்சு துடிக்க, துடிக்க கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கும் குற்றவாளியை நெருங்க முடியாததால் புதைக்கப்பட்டது.

கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில், மத்திய அரசு அதிகாரியின் மனைவி ஒருவர் பிறப்புறுப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வழக்கிலும் குற்றவாளியை பிடிக்காமல் போலீசார் அம்போ என்று விட்டுவிட்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கும், எழும்பூரில் ஒரு பெண் அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட வழக்கும் துப்பு கிடைக்காமல் புதைக்கப்பட்டு விட்டன. சென்னை விருகம்பாக்கத்தில் அடகு கடை அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கும் மண்ணோடு, மண்ணாக போனது.

கண்காணிப்பு கேமராக்கள், நவீன செல்போன்கள் போன்றவை அப்போதே இருந்திருந்தால் மேற்கண்ட வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பி இருக்க முடியாது என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com