கோவை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.522 கோடி கடன் வழங்க இலக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.522 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.522 கோடி கடன் வழங்க இலக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
Published on

கோவை,

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகையை விடுவிக்கவும், சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு கடன், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன், குழு கடன், நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2018-19 நிதி ஆண்டில் ரூ.15 ஆயிரம் கோடி வங்க கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.8 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். மகளிர் திட்டத்தின் கீழ் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் மாவட்டங்கள் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டன. அவர்களுக்கு ஆதார நிதி, வங்கிக் கடன் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. அதன் காரணமாக இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 6.63 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் 1 கோடியே ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் இதுவரை ரூ.7,726 கோடியை தங்களின் மொத்த சேமிப்பாக கொண்டு உள்ளன. அவர்களுக்கு இதுவரை வங்கிக் கடனாக மொத்தம் ரூ.58,649 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுவினர் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருவாய் ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளனர்.

சிறப்பாக செயல்படும் மகளிர் குழுக்களுக்கு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுத்தொகையுடன் கூடிய விருது மற்றும் சான்றிதழ் அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் என்பது நகர்ப்புற ஏழைகளுக்கான ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமாகும். இந்த திட்டம் 2014-15-ம் ஆண்டு முதல் நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2016-17 ம் ஆண்டில் ரூ.180 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ரூ.260 கோடியும், 2018-19-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கிட ரூ.522 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை ரூ.214 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.308 கோடியை வருகிற மார்ச் மாதத்திற்குள் வழங்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயல்பாடுகள், சுகாதார பணி குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரவீன் பி.நாயர், கலெக்டர் ஹரிகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், மகளிர் மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குனர் திரு.கணேஷ் கண்ணா, முன்னோடி வங்கி மேலாளர் வெங்கட்ராமன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com