கோவையில் சூறைகாற்றுடன் பெய்த மழையினால் பலத்த சேதம்

கோவையில் சூறைகாற்றுடன் பெய்த மழையினால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரும்பு தூண்கள் விழுந்ததில் வாகனங்கள் சேதம் அடைந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
கோவையில் சூறைகாற்றுடன் பெய்த மழையினால் பலத்த சேதம்
Published on

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் அடித்தாலும், மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று மாலை 5.15 மணியளவில் கோவையில் பலத்த சூறைகாற்று வீசியது. இதனால் நகரின் பல பகுதிகளில் காற்றில் புழுதி பரவியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்தின் மேல் பகுதியில் இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தன. சூறைகாற்றில் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தன. அப்போது தண்ணீர் குழாய் மீது விழுந்ததால் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. உக்கடம் பகுதியில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் சூறைகாற்றுக்கு விழுந்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் இரும்பு தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். வாகனங்கள் சேதம் அடைந்ததுடன், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மழைநீர் வடிகால் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் அடைத்து கிடந்ததால் மழைநீர் வடிகால் வழியாக செல்லாமல் கழிவு நீருடன் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையோரம் நடந்து சென்றவர்கள் சிரமம் அடைந்தனர். சாய்பாபா காலனி, வடகோவை மேம்பாலம், தடாகம் ரோடு பால்கம்பெனி, கோவைப்புதூர் புட்டுவிக்கி சாலையில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. கோவை ரெட்பீல்டு ராணுவ குடியிருப்பு அருகில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

வடகோவை பகுதியில் மரக்கிளை விழுந்ததில் ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது. கோவை கரும்புக்கடை ஆஸாத் நகர், சேரன்நகரில் பனைமரம் சாய்ந்து விழுந்தது. இதில் ஒரு வேன் சேதம் அடைந்தது. நகரின் பல பகுதிகளிலும் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினரும், போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.

மலுமிச்சம்பட்டியில் எல்அண்டு டி பைபாஸ் ரோடு போக்குவரத்து சுங்கச்சாவடி பகுதியில் இரும்பு தூண் சரிந்து சரக்கு வேன் மீது விழுந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சரக்கு வேன் பலத்த சேதம் அடைந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இரும்பு தூண் அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. குனியமுத்தூரில் தள்ளுவண்டி மீது மரம் விழுந்து வண்டி சேதம் அடைந்தது.

கோவை ரெயில் நிலையத்தில் மேற்கூரையில் உள்ள இரும்பு தகடுகள் பெயர்ந்து 1-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது ரெயில்கள் வராததால் பாதிப்பு ஏற்படவில்லை. ரெயில்வே ஊழியர்கள் இரும்பு தகடுகளை அகற்றினார்கள்.

பாப்பம்பட்டி பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கோவையில் பெய்த பலத்த மழையினால் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரிய நாயக்கன்பாளையம் ஜோதி புரம், கஸ்தூரி பாளையம், குப்பிச்சிபாளையம், பிரஸ்காலனி மத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் வறண்டுபோன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை கணபதி, சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்றுடன் மழை பெய்தது.

கோவை ரேஸ்கோர்ஸ், பீளமேடு, கணபதி, மணியக்காரன் பாளையம், கோவைப்புதூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, மதுக்கரை, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, நரசிபுரம், காருண்யா நகர் உள்ளிட்ட இடங்களில் சூறைகாற்று வீசியதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மரக்கிளைகளை அகற்றி மின் இணைப்பு வழங்க நீண்டநேரம் ஆனது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். நீண்டநேரத்துக்கு பின்னர் படிப்படியாக பல பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது.

காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆசிரியர் காலனி, காந்திநகர், கோடதாசனூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் காந்திநகர் பகுதியில் ராட்சத மரம் விழுந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் இந்த சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

கவுண்டம்பாளையம், பி அண்டு காலனி, ஜி.என்.மில், பன்னிமடை ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com