கடலூரில், பனைமுகம்-திருமுகம் எனும் உலக சாதனை நிகழ்ச்சி - தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

பனைமுகம் - திருமுகம் எனும் உலக சாதனை நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடந்தது. இதில் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.
கடலூரில், பனைமுகம்-திருமுகம் எனும் உலக சாதனை நிகழ்ச்சி - தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
Published on

கடலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் பனைமுகம் - திருமுகம் எனும் உலக சாதனை நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 10 ஆயிரத்து 465 பனை விதைகளால் தொல்.திருமாவளவன் முக உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் 3 ஆயிரத்து 46 இளைஞர்கள் திருமாவளவனின் முகமூடி அணிந்து அம்பேத்கரின் முக உருவத்தை வடிவமைத்திருந்தனர். அதோடு அவர்கள் ஒருசேர கைகளில் துணிப்பைகளை உயர்த்தி பிடித்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார்.

இந்த உலக சாதனைக்காக தொல்.திருமாவளவனுக்கும், மகளிர் விடுதலை இயக்கத்தின் துணைச்செயலாளர் செல்வபுஷ்பலதாவுக்கும் சான்றிதழ்களை உலக சாதனை பதிவேடுகளின் பொறுப்பாளர்கள் பாபு, உமா ஆகியோர் வழங்கினர்.

விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

இன்றைய தினத்திலே 3 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வுக்கு என்ன பெயர் வைப்பது என்று மகளிர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் என்னை அணுகிய போது, பனை விதையால் மட்டுமே என் முகத்தை வடிவமைப்பதால் பனைமுகம் என்றும் எனது முகமூடியை அணிந்த இளைஞர்கள் அம்பேத்கரின் முகத்தை வடிவமைப்பதால் திருமுகம் என்றும் வைக்கும் படி கூறினேன். எனவே இந்த நிகழ்வுக்கு பனைமுகம் - திருமுகம் என்று பெயர் சூட்டினேன்.

பனைமரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாக்கக்கூடியது என்பதால் பனைவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் தேர்தலுக்கான கட்சி அல்ல, எதிர்கால தலைமுறையை பாதுகாக்கக்கூடிய இயக்கம். இந்த இயக்கத்தை 30 ஆண்டுகாலம் நடத்தியதே கூட ஒரு உலகசாதனையாகும்.

சீன அதிபருடனான சந்திப்பை தமிழகத்தில் நடத்தியதற்காக நன்றி சொல்கிறோம். அதுவும் பிரதமர் தமிழர்களின் கலாசாரமான வேட்டியை கட்டி போஸ் கொடுத்ததாக இருந்தாலும், அது தமிழர்களுக்கு கொடுத்த மரியாதை.

இன்றைக்கு தூய தமிழ் பெயர்கள், கிராமப்புறங்களில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தான் உள்ளது. தமிழர்களே, இலக்கிய படைப்பாளர்களே உங்களுக்கு நல்ல தமிழ் சொற்கள் கிடைக்க வேண்டும் என்றால், சேரி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லுங்கள். அங்கு தான் இன்னும் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

சாதி ஒழிப்பை முன்னிலைப்படுத்துவது தான் தமிழ்தேசியம். சாதி தான் தமிழ் கலாசாரத்தை பண்பாட்டை, தமிழ் மொழியை சீரழித்து இருக்கிறது. எனவே சாதியை ஒழித்தால் தான் தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்க்க முடியும். இன்றைக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், அமைப்பு செயலாளர் திருமார்பன், மண்டல செயலாளர் திருமாறன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன், கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், அறிவுடைநம்பி, மகி, பாவாணன் உள்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com