

திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் நேரு நகர், மனமகிழ் மன்றம் தெருவை சேர்ந்தவர் மாலி (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர்களது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆகும். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இதன்பின் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 29-ந் தேதி அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நேரு நகர் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நேரு நகர் பகுதிகளில் உள்ள காலி இடத்தில் எப்பொழுதும் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி கிடக்கிறது. அதே போன்று அப்பகுதியில் உள்ள மழை நீர்க்கால்வாய்கள் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மழை நீர் கால்வாயை தூர்வாரியும், காலி இடங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.