எண்ணூரில் ரவுடி கொலையில் 6 பேர் கைது பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலம்

எண்ணூரில், ரவுடி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
எண்ணூரில் ரவுடி கொலையில் 6 பேர் கைது பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலம்
Published on

பெரம்பூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 53-வது பிளாக்கை சேர்ந்தவர் பாண்டியன் என்ற கருப்பு பாண்டியன்(வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது திருவொற்றியூரை சேர்ந்த கேட் சுப்ரமணியன் மற்றும் சின்னபாளையம் யாதவ சங்க தலைவர் பாண்டியமணி ஆகியோரை கொலை செய்த வழக்கு உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் பாண்டியன், சாப்பிட்டுவிட்டு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பாண்டியனை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு அருகே பதுங்கி இருந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கங்காதரன் (25), பிரபாகரன் (19), திருவொற்றியூரைச் சேர்ந்த அருண்ராஜ் (23), மோகன்ராஜ் என்ற பன்னு மோகன் (26), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன் (20), சரண் (19) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் 2013-ம் ஆண்டு கேட் சுப்பிரமணியனை கொலை செய்ததால் பழிக்குப்பழியாகவே அவரது உறவினர்கள் கூலிப்படையை ஏவி ரவுடி பாண்டியனை கொலை செய்தது தெரிந்தது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சுனாமி குடியிருப்பு பகுதியில் பாண்டியனை கொலை செய்ய முயன்றனர். அப்போது மர்மகும்பல் ஆயுதங்களால் வெட்டியதில் பாண்டியனுக்கு கை விரல்கள் துண்டானது. எனினும் அவர் உயிர் தப்பினார்.

அதன்பிறகு தன்னை கொலை செய்ய நினைத்தவர்களை பழிவாங்க பாண்டியன் சமயம் பார்த்ததாக தெரிகிறது. இதை அறிந்துகொண்டவர்கள், உயிருக்கு பயந்து அதற்கு முன்னதாக பாண்டியனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவரை வெட்டிக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com