ஈரோடு மாவட்டத்தில் 125 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 84 ஆக உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 125 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 84 ஆக உயர்வு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதற்கிடையில் ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு பரிசோதனை செய்ததால் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து டாக்டர்கள் முதியவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந்தேதி இறந்தார்.

இதேபோல் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் கடந்த 23-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 170 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,074 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 230 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com