ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு புதிதாக 102 பேருக்கு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் இறந்தனர். மேலும், புதிதாக 102 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு புதிதாக 102 பேருக்கு பாதிப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்தபோது ஈரோடு மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாக காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், தினமும் ஒருவர், 2 பேர் என இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 5 பேர் உயிரிழந்து இருப்பது ஈரோடு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கடந்த 24-ந் தேதியும், மொடக்குறிச்சி அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 47 வயது ஆண் நேற்று முன்தினமும் உயிரிழந்தனர். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த பவானியை சேர்ந்த 60 வயது முதியவர் 24-ந் தேதியும், பவானி காவிரி ரோட்டை சேர்ந்த 81 வயது மூதாட்டி நேற்று முன்தினமும் பலியானார்கள். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செம்பாண்டம்பாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் 24-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.

கொரோனாவின் பாதிப்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500-ஐ நெருங்கியது. நேற்று புதிதாக 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், முத்தம்பாளையம், அய்யனார் கோவில்வீதி, வெட்டுக்காட்டுவலசு, சூரம்பட்டி, கைகாட்டுவலசு, முனிசிபல்காலனி, நாராயணவலசு, ஈ.பி.பி.நகர், பெரியார்நகர், எஸ்.கே.சி.ரோடு, காந்திநகர், குமலன்குட்டை, சூரம்பட்டிவலசு, செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் மொடக்குறிச்சி காட்டுப்பாளையம், நல்லாந்தொழுவு, சாணார்பாளையம், கணபதிபாளையம், முத்துகவுண்டம்பாளையம், சென்னிமலை, பெருந்துறை, விஜயமங்கலம், அந்தியூர் அங்காளம்மன் வீதி, குருமாம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், எண்ணமங்கலம், பவானி குருப்பநாயக்கன்பாளையம், காலிங்கராயன்பாளையம், கவுந்தப்பாடி வடக்கு வீதி, பழனிசாமிகவுண்டர் வீதி, சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம், பத்ரகாளியம்மன் கோவில் வீதி, வடக்கு பேட்டை, கரட்டூர், கே.என்.பாளையம், கோபி குள்ளம்பாளையம், நல்லகவுண்டம்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம், புங்கம்பள்ளி, அம்மாபேட்டை முகாசிப்புதூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சை மையங்களையும் அதிகரிக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 498 ஆக உள்ளது. இதில் நேற்று 92 பேர் குணமடைந்தார்கள். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,390 ஆக உயர்ந்தது. 1,070 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com