குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ரத்து

2 நாட்கள் தொடர் போராட்டம் காரணமாக குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ரத்து
Published on

குடியாத்தம்,

குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 80 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் 24 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 56 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டவர்களும், அவர்கள் சார்ந்த தி.மு.க., பா.ம.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் காலையில் இருந்து வங்கி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நேற்று காலையும் தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூட்டுறவு சங்கங்களின் வேலூர் சரக துணைப்பதிவாளர் பாஸ்கரன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், விசாரணை இல்லாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி குமார், குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து, அதற்கான அறிவிப்பை ஒட்டினார். இதனையடுத்து 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக போராட்டத்தை யொட்டி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com