ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 172 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல்
Published on

புதுச்சேரி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். இதையொட்டி தமிழக அரசை கண்டித்து புதுவை புதிய பஸ்நிலைய வாயிலில் நேற்று மதியம் நாம் தமிழர் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், கவுரி ஆகியோர் மறியலுக்கு தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பாக்கியராஜ், திவாகர், ஜெகதீஸ், ரமேஷ், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.

அதேபோல் இந்திரா காந்தி சிலை அருகே மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியலில் ஈடுபட்ட 75 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இயக்கத்தின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர் செல்வம், லோக் ஜனசக்தி நிர்வாகி புரட்சி வேந்தன், திராவிட கழக நிர்வாகி ராசு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தீனா, தமிழர் களம் தலைவர் அழகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 38 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை நகர கமிட்டி சார்பில் மதிவாணன் தலைமையில் காமராஜர் சிலை அருகே நிர்வாகிகள் திரண்டு சாலைமறியல் ஈடுபட்டனர். இதில் 27 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பல இடங்களில் மறியல் நடத்தி மொத்தம் 172 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com