

நெல்லை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி என 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. நேற்று 6-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது. நெல்லை சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அழகேசன், மார்க்சிஸ்ட் லெனிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுந்தர்ராஜ், சுயேச்சை வேட்பாளர்களாக பரமசிவன், சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. மாற்று வேட்பாளராக எஸ்.வி.சுரேஷ் மனுத்தாக்கல் செய்தார். பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் மற்றொரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை தொகுதிக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கண்ணன் வேட்புமனுக்களை பெற்றார். தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் பெயரில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனைவி ஹாஜிரா வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளர்களாக தயாளன், ராஜா, வீர சுப்பிரமணியன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
ராதாபுரம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா வேட்பு மனுக்களை பெற்றார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உத்திரலிங்கம், மாற்று வேட்பாளராக சரவணகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சுனில் கவாஸ்கர், சுயேச்சை வேட்பாளர்களாக சாஸ்வதன், சுடலைமணி, கண்ணன், சேர்மதுரை, ஜேசு ராஜேந்திரன், ரஜீத்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அம்பை தொகுதிக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் வேட்புமனுக்களை பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையா மற்றொரு வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வட்பாளராக இசக்கிதுரை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக ராணி ரஞ்சிதம், சமத்துவ மக்கள் கட்சி வட்பாளர் செங்குளம் கணேசன், சு.வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் இந்தியர் கட்சி சார்பில் ராமகிருஷ்ணன், சுயேச்சை வேட்பாளராக கவாஸ்கர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
நாங்குநேரி தொகுதியில் தி.முக. கூட்டணி சார்பில் ரூபி மனோகரன், சுயேச்சை வேட்பாளர்களாக ஜெகதீசன், கந்தன், கதிரவன், பாக்கியமுத்து, பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் சேவியர், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் பிரபாகரன், அ.ம.மு.க. மாற்று வேட்பாளராக ராஜசேகர், அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளர் பேராயர் காட்ப்ரே வாஷிங்டன் நோபுள் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் என்பதால் நேற்று மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 44 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசிநாள் ஆகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.