

பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், வணிகவரி பதிவுத்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் மாவட்டத்தில் மருத்துவத்துறை, வருவாய்துறை, தீயணைப்புதுறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுள்ளப்பட்டது. பின்னர் அமைச்சர் தங்கமணி கூறும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா இருவரும் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் மணிமேகலை தெரு இந்திரா நகர் பகுதிகளில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முதல்-அமைச்சர் இன்று வருகை தர உள்ள இடங்களையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அவர்களுடன் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.