

ராசிபுரம்,
ராசிபுரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக நேற்று 150 பள்ளி வாகனங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சதாசிவம், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் ஆகியோர் ஈடுபட்டனர்.
இதில் தீ அணைப்பான் கருவி, முதலுதவி பெட்டி, படிக்கட்டுகளின் உயரம், கண்ணாடி ஜன்னல்களின் அளவு, பலகைகளின் தரம் உள்பட பல்வேறு அம்சங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பள்ளி வாகனங்களில் அவசர வழி கதவு சரியாக இயங்குகிறதா என்பதையும் அவர்கள் சரி பார்த்தனர்.
இதில் 4 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் அந்த குறைபாடுகளை சரி செய்து ஆய்வுக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.