

சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் நூலகம் எதிரில் கழிவு நீர் சாக்கடை செல்கிறது. இந்த சாக்கடைக்குள் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சுற்றித்திரிந்த குதிரை ஒன்று தவறி விழுந்துவிட்டது.
4 அடி ஆழம் உள்ள அந்த சாக்கடையில் அகலம் குறைவாக இருந்ததால் குதிரையால் மேலே ஏறி வர முடியவில்லை. சாக்கடைக்குள்ளேயே பரிதவித்தப்படி இருந்தது. அந்த வழியாக சென்ற சிலர் இதை பார்த்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் சாக்கடையில் இருந்து குதிரையை உயிருடன் மீட்டார்கள்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு அதிகாரி விசாரித்ததில், சாக்கடையில் விழுந்த குதிரையின் சொந்தக்காரர் சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் மேட்டை சேர்ந்த அச்சுதன் என்பவர் என்று தெரியவந்தது. உடனே அவருக்கு தகவல் கொடுத்து வரழைக்கப்பட்டார். அப்போது அச்சுதன் கூறும்போது, என்னுடைய குதிரை 4 மாத சினையாக உள்ளது. எப்படியோ சாக்கடையில் தவறி விழுந்துவிட்டது. தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டிருக்காவிட்டால் குதிரையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்றார். பின்னர் அவர் குதிரையை வீட்டுக்கு பிடித்து சென்றார்.