சவூதி அரேபியாவில் சித்ரவதை அனுபவித்து வரும் மனைவியை மீட்டு தர வேண்டும்

சவூதி அரேபியாவில் சித்ரவதை அனுபவித்து வரும் மனைவியை மீட்டு தர வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் நாதஸ்வர கலைஞர் மனு அளித்தார்.
சவூதி அரேபியாவில் சித்ரவதை அனுபவித்து வரும் மனைவியை மீட்டு தர வேண்டும்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் செங்கம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த முத்து என்பவர் சவுதி அரேபியாவில் சித்ரவதை அனுபவித்து வரும் தனது மனைவியை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். நான் நாதஸ்வரம் வாசித்து வாழ்ந்து வருகிறேன். எனது மனைவி வள்ளி (வயது 32). எங்களுக்கு ரம்யா, சினேகா என 2 மகள்கள் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாகவும், மகள்களை திருமணம் செய்து வைப்பதை கருத்தில் கொண்டும் வீட்டு வேலைக்காக என் மனைவியை சவுதிஅரேபியாவுக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஏஜெண்டு மூலம் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி வைத்தேன்.

தற்போது என் மனைவி என்னை போனில் தொடர்பு கொண்டு, அவரை அதிக அளவில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்து வருவதாகவும், அடிக்கடி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தன்னை காப்பாற்றுமாறு கூறினார். மேலும் என் மனைவிக்கு சாப்பாடு போடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் கூறி கதறி அழுதார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சியில் உள்ள ஏஜெண்டிடம் சென்று, என் மனைவியை மீட்டு தரக் கூறினேன். அதற்கு அவர் உன் மனைவியை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளேன் என்றும், அந்த பணத்தை திருப்பி கொடு இல்லையென்றால் உன் மனைவி அங்கேயே இன்னும் 2 வருடங்கள் சித்ரவதை அனுபவிக்கட்டும் என்று பொறுப்பின்றி பேசுகிறார். எனவே, மாவட்ட கலெக்டர் அந்த ஏஜெண்ட்டை அழைத்து விசாரணை செய்து, சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கும் என் மனைவியை மீட்டுத்தர வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com