வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க வெள்ளி விழா: ‘தமிழகத்தில் நிலத்தடி நீரும், பாராட்டும் பண்பும் குறைந்து வருகிறது’ கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழகத்தில் நிலத்தடி நீரும், பாராட்டும் பண்பும் குறைந்து கொண்டே போவதற்காக வருந்துவதாக சென்னையில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க வெள்ளி விழா: ‘தமிழகத்தில் நிலத்தடி நீரும், பாராட்டும் பண்பும் குறைந்து வருகிறது’ கவிஞர் வைரமுத்து பேச்சு
Published on

சென்னை,

வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா, அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடந்தது. அமைச்சர் பாண்டியராஜன் விழாவை தொடங்கி வைத்து குறளோசை இசைப்பேழையை வெளியிட ஏ.சி. சண்முகம் பெற்றுக்கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விஜயராகவன் ஆகியோர் பேசினர். முன்னதாக சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வரவேற்றார். டி.கே.எஸ்.கலைவாணனின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. வி.ஜி.பி. குழும மேலாண்மை இயக்குனர் வி.ஜி.பி.ரவிதாஸ் நன்றி கூறினார்.

பின்னர் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமையில் கருத்தரங்கமும், கவிஞர் வா.மு.சேதுராமன் தலைமையில் கவியரங்கமும் நடந்தது. முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தலைமையில் திருக்குறள் காலமும் கருத்தும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பின்னர் பேராசிரியர் ராஜகோபாலன் தலைமையில் பட்டிமன்றமும் நடந்தது.

வெள்ளி விழா சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியில், விருதை பெறவிருந்த இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் கே.சிவன் பணிநிமித்தமாக வரஇயலாததால், அவருடைய வாழ்த்து செய்தி காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் சார்பில் அவருடைய மகனும் பல்கலைக்கழக துணை தலைவருமான ஜி.வி.செல்வத்திடம், வி.ஜி.சந்தோசம் வெள்ளி விழா சிறப்பு விருதை வழங்கினார். வி.ஜி.பி. குழும இயக்குனர் ராஜாதாஸ் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டமும், பாராட்டும் பண்பும் குறைந்து கொண்டே போவதற்காக வருந்துகிறேன். பாராட்டு என்பது ஒரு சமுதாயத்தின் நாகரிகம். பாராட்டப்படுகிறவன் மலைபோல் உயர்கிறான், பாராட்டுகிறவன் ஆகாயமாய் விரிகிறான்.

வி.ஜி.சந்தோசத்தின் பணிகளிலேயே பெரும்பணி திருவள்ளுவரையும் திருக்குறளையும் உலகநாடுகளுக்கெல்லாம் கொண்டு சென்றதுதான். அந்நியச் செலாவணி பெருக வேண்டுமென்றால் நாம் ஆடைகளையும் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

ஆனால் அறிவு கலாசாரம் பெருக வேண்டுமென்றால் நாம் உலக நாடுகளுக்கு திருவள்ளுவரை தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். தமது வாழ்நாளில் 133 நாடுகளில் அவர் திருவள்ளுவர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையில் நிறைவு விழா நடந்தது. விழா மலரை அமைச்சர் டி.ஜெயகுமார் வெளியிட, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி தாளாளர் லதா ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், இலங்கை க.சச்சிதானந்தம், கனடா அடிகளார் விபுலானந்தா, குமரி அனந்தன், தொழிலதிபர் அபுபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 25 தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com