சட்ட விதிகளின் அடிப்படையில் கோப்புகளுக்கு தீர்வு கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

சட்ட விதிகளின் அடிப்படையில் தான் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார்.
சட்ட விதிகளின் அடிப்படையில் கோப்புகளுக்கு தீர்வு கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
Published on

பாகூர்,

தவளக்குப்பம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை-புதுச்சேரி நகரமைப்பு குழுமம் சார்பில் அலுவலக நடைமுறை, பதிவு மேலாண்மை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களிடம் கவர்னர் கிரண்பெடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசுக்கு அனுப்பப்படும் கோப்புகளில் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அதனை தவிர்க்க வேண்டும். கோப்புகளில் கையொப்பங்களை இட போதிய இடம் விட வேண்டும். கையொப்பங்கள் தெளிவாக யாருடையது என்பதை கையொப்பத்தின் கீழே தெரிவிப்பது அவசியம். தகுதி வாய்ந்தோரிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டால் அதனை முதலில் செயல்படுத்த வேண்டும். சந்தேகம் இருந்தால் கோப்புகளை மீண்டும் சமர்ப்பித்து அதில் உள்ள சந்தேகங்களை கேட்டு அறிய வேண்டும். சட்ட விதிகள் அடிப்படையில் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டும்.

தற்போது கோப்புகளின் நிலை கண்காணிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவது இந்த காலகட்டத்தின் கட்டாயம். ஆன்லைன் முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அனைத்து துறைகளும் இதே போல் மாதம் ஒரு முறை பயிற்சி முகாம் நடத்துவது அவசியம். இதன் மூலம் அனைத்து துறையினரும் கற்க முடியும். முடிவெடுக்கவும், நிர்வாகத்திறனை மேம்படுத்தவும் இது போன்ற பயிற்சிகள் உதவும். கோப்புகளை வாரம் தோறும் அனுப்பி வைக்கும் நடைமுறையை துறைகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நகரமைப்பு துறை செயலாளர் மகேஷ், தலைமை நகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி நகரமைப்பு குழும உறுப்பினர் செயலர் புவனேஸ்வரன், துணை நகர அமைப்பாளர்கள் விஜயநேரு, கந்தர்செல்வன் கலந்து கொண்டனர். முகாமில், நகர மற்றும் கிராம அமைப்பு துறை, புதுச்சேரி நகரமைப்பு குழுமம், குடிசை மாற்று வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 65 அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

முகாமில் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் முன்னாள் இயக்குனர் எஸ்.கே.தாஸ் குப்தா கலந்து கொண்டு கோப்புகள் கண்காணிப்பு, செயல்திறன், கோப்புகள் மேலாண்மை, பதிவுகள் மேலாண்மை மற்றும் அது தொடர்புடைய சட்டம் மற்றும் விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 குறித்து பயிற்சியளித்தார். தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அடிப்படையில் தேர்வுகளை நடத்தினார். இதில் பெரும்பாலானோர் 80 முதல் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com