கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
Published on

திருச்சி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இன்னும் உள்கிராமங்களில் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புயல் பாதிப்புகளை பிரதமர் தான் வந்து பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. காலம் தாழ்த்தாமல் உரிய நிதியை ஒதுக்கி ராணுவத்தை மீட்பு பணிக்கு அனுப்பினாலே போதும்.

புயலுக்கு முன் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்தது. அதனால் உயிர்ச்சேதம் குறைந்துள்ளது. ஆனால் அதன்பிறகு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி இருக்க வேண்டும். தற்சமயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி இருந்தால் அரசின் வேலை பெருமளவு குறைந்து இருக்கும். மக்களின் பிரதிநிதிகள் களத்தில் இருந்து இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே மக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்க்க முடியாததற்கு காரணம்.

தற்போது கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு பனைமரங்கள் அழிந்தது தான் காரணம். 1947-ம் ஆண்டில் தமிழகத்தில் 50 கோடி பனைமரங்கள் இருந்தன. தற்போது வெறும் 4 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. பனைமரங்கள் இருந்து இருந்தால் புயலின் கோரத்தாண்டவத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கும். ஆகவே தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்கினால் விவசாயிகள் பனைமர சாகுபடியை தொடங்கி விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காவிரி டெல்டா சங்க தலைவர் தீட்சிதர் பாலு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஹேமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com