சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிகப்படியாக அங்கம் வகிப்பார்கள் கள்ளக்குறிச்சி மாநாட்டில் மாநில தலைவர் முருகன் பேச்சு

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிகப்படியாக அங்கம் வகிப்பார்கள் என கள்ளக்குறிச்சியில் நடந்த மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் கூறினார்.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிகப்படியாக அங்கம் வகிப்பார்கள் கள்ளக்குறிச்சி மாநாட்டில் மாநில தலைவர் முருகன் பேச்சு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ஜ.க. அணி பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். தொழில் பிரிவு தலைவர் தியாகராஜன், வர்த்தகர் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், மகளிரணி தலைவி தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி தலைவர் கோபிநாத் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் தவறாக பரப்பி வருகிறார்கள். இந்த சட்டத்தால் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும்.

பட்டியல் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது எனவும், பிரதமர் மோடி பட்டியல் இன மக்களுக்கு எதிரி என எதிர்கட்சிகள் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் பிரதமர் மோடி 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் படிப்பு மற்றும் உயர்கல்வி படிப்பதற்கு ரூ.59 கோடி கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளார். எனவே பிரதமர் மோடியின் திட்டங்களை கட்சி நிர்வாகிகள் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

வருங்காலம் பா.ஜ.க.வின் காலம். சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.உறுப்பினர்கள் அதிகப்படியாக அங்கம் வகிப்பார்கள். தமிழகத்தில் வருகிற ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்-அமைச்சர் தான் சட்டசபையில் இருக்கப் போகிறார். அங்கு கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளில் இருந்து நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் சட்டசபை உறுப்பினர்களாக செல்ல வேண்டும். இதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில் மாவட்ட பார்வையாளர் தடா.பெரியசாமி, விவசாய பிரிவு தலைவர் ஹரிகோபால், பொதுச்செயலாளர் ராஜேஷ், இளைஞரணி செயலாளர் ஹரி, நகர தலைவர் சர்தார் சிங் உள்பட மாநில, மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் லோகராஜா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com