செங்கல்பட்டு மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய தாம்பரம் பகுதியில் 76 வயது முதியவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். திருநீர்மலை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி, இரும்புலியூர் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந் தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் செங்கல்பட்டு அரசு ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செம்பாக்கம் நகராட்சி ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் ஆவடியில் பணிபுரிந்து வரும் 34 வயது போலீஸ்காரருக்கும், கீழ்கட்டளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் பாதிக்கப்பட்ட வாலிபரின் 32 வயது சகோதரிக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் ஒரே குடும்பத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏர் இந்தியா ஊழியர்

ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி மலையம்மன் நகரில் 32 வயதான 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மூலம் இவருக்கு பரவியது தெரிந்தது. பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதி நசரத்புரத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கு, அவரது வீட்டின் அருகே வசித்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் பரவி இருப்பது தெரிந்தது.

அதே நசரத்புரத்தை சேர்ந்த 42 வயதான ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் சர்க்கரை நோயால் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் துப்புரவு உதவியாளராக வேலை பார்த்து வரும் பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் 26 வயதான வாலிபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

முதியோர் இல்லத்தில் மூதாட்டி

போரூர் அடுத்த காரம்பாக்கம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் தங்கி உள்ளனர். இங்குள்ள 85 வயது மூதாட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வயிற்று போக்கு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு வசிக்கும் ஒரு மூதாட்டியை பார்க்க அவரது உறவினர்கள் வந்து சென்றதாகவும், அவர்கள் மூலமாக இந்த மூதாட்டிக்கு கொரோனா பரவியதா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்

மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த 32 வயது வாலிபர், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வெங்காய மண்டியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மண்டியில் வெங்காயம் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சந்தேகத்தின் பேரில் இவர் தானாக முன்வந்து பரிசோதனை செய்தார். அதில் அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூரைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் தனிமைப்படுத்திக் கொள்ளுபடி டாக்டர் கூறியதால் திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் மனைவியுடன் தனிமைப்படுத்தி இருந்தார். மீண்டும் அவருக்கு சளி, காய்ச்சல் வந்ததால் வளசரவாக்கத்தில் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆயுதப்படை போலீஸ்காரர், சென்னை தண்டையார் பேட்டை போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மனைவி சொந்த ஊரில் வசிக்க இவர், மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ஆவடி வசந்தம் நகரில் 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமைந்தகரையில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்யும் 40 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் இவர் உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் இவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்கேயே தங்கி இருந்தனர். அதில் 29 வயதான வாலிபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஒரே இடத்தில் உள்ள இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது எப்படி என தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com