ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ் -2 படித்தவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 30-6-2016 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் நேரடியாக படித்துக்கொண்டிருக்க கூடாது. விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகைபெற தகுதி அற்றவர்கள் ஆவர்.

இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வருகிற ஆகஸ்டு மாதம் 28-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com