கலபுரகியில், தேர்தலையொட்டி குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது - ரவுடிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தேர்தலையொட்டி குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என ரவுடிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலபுரகியில், தேர்தலையொட்டி குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது - ரவுடிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
Published on

கலபுரகி,

கலபுரகியில், சட்டசபை தேர்தலையொட்டி குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என ரவுடிகளை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் எச்சரித்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் தலை முடியும் வெட்டி விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகத்தில் பெங்களூருவை அடுத்து கலபுரகியில் தான் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகள் உள்ளனர். மேலும் அங்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகள் விற்பனையிலும் ரவுடிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கலபுரகி டவுன், புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளின் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் தலைமையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ரவுடிகளின் வீடுகளில் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கலபுரகியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு போலீசார் அழைத்து சென்றார்கள். அங்கு சென்றதும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக எந்த விதமான குற்ற சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது, பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் விதமாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரவுடிகளை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் எச்சரித்தார்.

அப்போது அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பொது மக்களை பயமுறுத்தும் விதமாக தங்களது தலை முடியை வளர்த்திருந்தனர். மேலும் பலர் தாடி வளர்த்திருந்தனர். இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் தலை முடி போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையிலேயே வெட்டப்பட்டது. அதுபோல, ரவுடிகளின் தாடியும் சேவிங் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் ரவுடிகள் தங்களது கை, கழுத்தில் போட்டு இருந்த இரும்பு காப்புகள், சங்கிலிகளையும் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் பிடுங்கி வீசினார். அதன்பிறகு, அவர், தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்று எச்சரித்து, ரவுடிகளை அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com