கருமந்துறை பகுதியில், தக்காளி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கருமந்துறை பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கருமந்துறை பகுதியில், தக்காளி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
Published on

பெத்தநாயக்கன்பாளையம்,

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் வாகனங்கள் மூலம் தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல அரசு தடை இல்லை என அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கருமந்துறை பகுதியில் தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்து, பெட்டிகளில் அடுக்கி வைத்து சரக்கு வாகனங்கள் மூலம் தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ரூ.150-க்கு தான் விற்பனையாகிறது. இந்த கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது தோட்டத்தில் தக்காளியை பறிப்பதற்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. எனினும் கிடைக்கும் ஆட்களுக்கு தலா ரூ.250 கூலி வழங்கி தக்காளி பறிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறோம். மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல பெட்டிக்கு ரூ.50 வரை செலவாகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.5 வீதம், 30 கிலோ கொண்ட பெட்டி ரூ.150-க்கு தான் விற்பனையாகிறது. ஆனால் அவை வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com