குமரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரின்போது மக்களுக்கு உதவ துணை ராணுவ வீரர்கள் முடிவு

குமரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு உதவ துணை ராணுவ வீரர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் குழு அமைத்து செயல்படவும் ஆலோசனை நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரின்போது மக்களுக்கு உதவ துணை ராணுவ வீரர்கள் முடிவு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து ஒரு குழு அமைத்து இருக்கிறார்கள். மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதற்காக இந்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறினர். இந்த குழுவில் இணைந்துள்ள அனைவருமே பணியில் இருக்கும் துணை ராணுவ வீரர்கள் ஆவர்.

இதுபற்றி துணை ராணுவ வீரர்களிடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் காஷ்மீர் உள்பட பல்வேறு இடங்களில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராணுவத்தின் மீதும், ராணுவ வீரர்களின் மீதும் மக்கள் அளவு கடந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்காக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். எனவே ஜவான்ஸ் என்ற பெயரில் ஒரு குழு அமைத்து உள்ளோம். இதில் சுமார் 2 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இயற்கை பேரிடர், விபத்து உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனே அங்கு சென்று எங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்வோம். எங்கள் குழு மூலமாக ரத்ததானமும் செய்யப்படும். பணியில் இருக்கும் வீரர்களால் எப்படி உதவ முடியும் என்று கேட்கலாம். ஆனால் நாங்கள் விடுமுறையில் ஊருக்கு வரும் போது மட்டும் தான், இந்த உதவி பணிகளில் ஈடுபடுவோம். எப்படி பார்த்தாலும் ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் விடுமுறையில் இருப்பார்கள். எனவே உதவி பணிகள் தடையின்றி நடைபெறும். மேலும் மக்கள் எங்களை அணுகுவதற்காக சமூக வலைதளங்களில் குரூப் தொடங்கப்படும் என்றனர்.

இதைத் தொடர்ந்து குழுவில் இணைந்த துணை ராணுவ வீரர்கள் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் திரண்டனர். பின்னர் அவர்களது குழுவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com