மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

சேலம்,

சேலம் மாநகர மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதாவது, பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ரவுடிகள், திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள் சாராய கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் கொலை சம்பவங்களை அரங்கேற்றுபவர்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஓராண்டு சிறையில் இருந்து வெளிவராமல் இருக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகரத்தில் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் கமிஷனர்கள் ஆகியோர் கமிஷனருக்கு பரிந்துரை செய்கிறார்கள். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதேபோல் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்கிறார்கள். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். இதனால் குற்றச்சம்பவங்கள் குறைவதாகவும், மோதல் கொலைகள் தவிர்க்கவும் வாய்ப்புள்ளது. இந்தநிலையில் சேலம் மாநகரத்தில் கடந்த 7 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதாவது, டவுன் போலீஸ் நிலைய எல்லையில் ஒருவர், செவ்வாய்பேட்டை போலீஸ் நிலைய எல்லையில் 1, அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் 10 பேர், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலைய எல்லையில் 11 பேர், அம்மாபேட்டை போலீஸ் நிலைய எல்லையில் 4 பேர், அஸ்தம்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் 2 பேர், கன்னங்குறிச்சி போலீஸ் எல்லையில் 3 பேர், அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லையில் 8 பேர், பள்ளப்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் 4 பேர், சூரமங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் ஒருவர் என 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்காகவும், வழிப்பறி தொடர்பாக 22 பேரும் அடங்குவர்.

கடந்த 2017-ம் ஆண்டு 7 மாதங்களில் 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 23 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு (2017) 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 7 மாதத்தில் மாநகர, மாவட்டத்தில் மொத்தம் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com