கூடலூர் மார்க்கெட்டில் பனங்கிழங்கு வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.70-க்கு விற்பனை

கூடலூர் மார்க்கெட்டில் பனங்கிழங்கு வரத்து அதிகரித்து உள்ளது. 1 கிலோ பனங்கிழங்கு ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
கூடலூர் மார்க்கெட்டில் பனங்கிழங்கு வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.70-க்கு விற்பனை
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளது. இங்கு கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளும், சைனீஷ் காய்கறிகளும் ஊட்டி, பைக்காரா, நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இதேபோல் கூடலூர் பகுதியில் ஏலக்காய், கிராம்பு, காபி, இஞ்சி, குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

இதுதவிர நேந்திரன் வாழை, பஜ்ஜி மிளகாய், கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய் உள்பட சமவெளியில் விளையக்கூடிய காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. தக்காளி, சிறு கிழங்கு, பூசணிக்காய், வெண்டைக்காய், கோவக்காய், சின்ன மற்றும் பெரிய வெங்காயம் உள்பட பல்வேறு காய்கறிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, சேலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் பனை மரங்கள் அதிகளவு உள்ளன. இந்த மரங்களின் அனைத்து பாகங்களும் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுகிறது. பதநீர், நுங்கு, பனங்கிழங்கு என உடலுக்கு வலுவூட்டும் உணவு பொருட்களும் பனை மரத்தில் இருந்து பெறப்படுகிறது.

இன்றைய வளர்ந்து வரும் நாகரீக உலகில் பனை மரத்தின் பயன்பாட்டை இன்றைய தலைமுறைகள் அறிவது இல்லை. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பனை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு கிடையாது. ஏனெனில் நீலகிரியில் நிலவும் காலநிலையில் பனை மரங்கள் வளர்வது இல்லை. தற்போது பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. கூடலூர் பகுதியில் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர்.

இதனால் பனங்கிழங்குகளின் மகத்துவத்தை தெரிந்து வைத்து இருக்கும் மக்களின் தேவைகளுக்காக கூடலூர் மார்க்கெட்டுகளில் பனங் கிழங்குகள் வரத்து அதிகரித்து உள்ளது. பனங்கிழங்குகளை வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துகள் கிடைக்கிறது. 1 கிலோ பனங்கிழங்கு ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமே பனங்கிழங்குகளை வாங்கி செல்கின்றனர். இக்கிழங்குகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. இதனால் அனைத்துதரப்பு மக்களும் சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com