

புதுச்சேரி,
புதுவை வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வாலிபர் ஒருவர் கடந்த 22-ந்தேதி பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் அவர் யார்? என்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்த நபர் புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையம் குளத்து தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் பரத் (25) என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் கொத்தனாராகிய அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 21), சோலைநகர் கண்ணதாசன் வீதியை சேர்ந்த அருண் என்ற அருண்குமார் (19), வைத்திக்குப்பம் செட்டியார் வீதியை சேர்ந்த மனோஜ்குமார் (24) ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.