சோதனை என்ற பெயரில் வீடுபுகுந்து அச்சுறுத்துகிறார்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு

சோதனை என்ற பெயரில் வீடு புகுந்து அதிகாரிகள் அச்சுறுத்துகிறார்கள் என்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
சோதனை என்ற பெயரில் வீடுபுகுந்து அச்சுறுத்துகிறார்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
Published on

கோவை,

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில், முபாரக், சதாம் உசேன், அபுதாகீர், சுபேர் ஆகிய 4 பேர் கைதானார்கள். இந்த 4 பேரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு சுபேரின் தாய் நபீசா, முபாரக்கின் மனைவி ஆயிஷா, அபுதாகீரின் மனைவி சுமையா, சதாம் உசேனின் தந்தை பரக்கத்துல்லா மற்றும் முஸ்லிம் பெண்கள் பலர் கலெக்டர் ஹரிகரனை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 18-ந்தேதி அதி காலையில் ஒரு பெரிய போலீஸ் படையே எங்களது வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்பதை நன்கறிந்து கொண்ட நிலையிலும் பெரிய கும்பலாக வந்து சோதனை என்ற பெயரில் வீடு புகுந்து அச்சுறுத்தினார்கள். வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான பயமும், மனஉளைச்சலும் ஏற்பட்டது.

சட்டப்படியான எந்த ஒரு விசாரணைக்கும் முறையாக நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். ஆனாலும், அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு தகுந்த பாது காப்பு அளிக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும். இந்த வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது, ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் போலீசார் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்கள் நிருபர்களிடம் கூறும்போது, இந்த வழக்கை வேண்டும் என்றே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளனர். இந்த வழக்கில் கைதானவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், கைதானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். வீடுகளில் சோதனை என்ற பெயரில் குடும்பத்தினரும் மிரட்டப்படுகிறார்கள். இதுபோன்ற நிலை ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com