

பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கடலோர மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் மழை குறைந்த அளவுக்கு தான் பெய்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களான யாதகிரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பெலகாவி, பல்லாரி, விஜயாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
அதே நேரத்தில் மராட்டியத்திலும் கனமழை கொட்டியதால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக யாதகிரி, பாகல்கோட்டை, ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் கிருஷ்ணா ஆற்றங்கரையையொட்டியுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும் சாலைகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த கனமழையால் வடகர்நாடக மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வடகர்நாடகத்தில் மழை பெய்யவில்லை. இதனால் வெள்ளம் வடிந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதாவது யாதகிரி, பீதர், விஜயாப்புரா, ராய்ச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் வீடுகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகாவில் உள்ள கானாப்பூர் கிராமத்தில் 30 வீடுகளுக்குள்ளும், நாகனூர் கிராமத்தில் 20 வீடுகளுக்குள்ளும், எச்.நாகாபுரா கிராமத்தில் உள்ள 10 வீடுகளுக்கும் மழைநீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த தண்ணீரை அங்கு வசித்து வந்த மக்கள் பாத்திரங்களில் பிடித்து வெளியே கொட்டினர்.
இதுபோல பீதர் டவுனில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பீதர் டவுனில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பீதர் அருகே உள்ள கிராமங்களிலும் பெய்த கனமழைக்கு விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
இதுபோல விஜயாப்புரா, ராய்ச்சூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் இரவு முழுவதும் விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாய பணிகளையும் தொடங்கி உள்ளனர்.