கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை - கருணாஸ் எம்.எல்.ஏ.பேட்டி

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்று முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் நிருபர்களிடம் கூறினார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை - கருணாஸ் எம்.எல்.ஏ.பேட்டி
Published on

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது எனக்கு மரியாதை உண்டு. பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. தனிப்பட்ட கோபங்களை பத்திரிகையாளர்கள் மீது வெளிப்படுத்தக்கூடாது. அவ்வாறு பத்திரிகையாளர்களை பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசி இருக்க கூடாது.

முக்குலத்தோர் புலிப்படையை பொறுத்தவரை எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. இதற்கு காரணம் அதற்கான அரசியல் கட்டமைப்பு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. பா.ம.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்று ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் எங்களது நோக்கம். முக்குலத்தோர் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச ஒருவர் கூட இல்லை என்பதை 27 சதவீதம் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்திற்கு ஒரு அவமானமாக நினைக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள இந்த அரசு தொடர்ந்து ஆட்சி அமைக்க அவர்களுக்கு குறைந்த பட்சம் 7 இடங்கள் தேவைப்படுகிறது. இருண்ட தமிழகத்திற்கு வெளிச்சம் கொடுக்க வேண்டும் என்ற புதிய பாதையில், புதிய சிந்தனையில், புதிய யுக்தியோடு கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கேற்ற வகையில் டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளது. திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள் உருவாக்கப்பட்ட காலங்களில் மிகச்சிறிய கட்சி தான். தற்போது தான் கட்சிகள் பெரியதாகி உள்ளன. அதனால் யாரையும், யாரும் குறைவாக மதிப்பிடக்கூடாது.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு தலைவர்கள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் இது. சமூக நீதிக்கு சவாலான தேர்தல் ஆகும். எனவே தமிழக இளைஞர்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது? நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குறை சொல்லவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 5 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு என்ன செய்தது என்பது தான் கேள்வி. இதற்காக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது குறை சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com