ஓடும் ரெயிலில் சாகசம் செய்த வாலிபர் வீடியோ வெளியாகி பரபரப்பு

மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியான மின்சார ரெயில் இளைஞர்கள் பலருக்கு சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது.
ஓடும் ரெயிலில் சாகசம் செய்த வாலிபர் வீடியோ வெளியாகி பரபரப்பு
Published on

மும்பை,

ஓடும் ரெயிலில் தொங்கிக்கொண்டு ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சாகசங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும் அவர்கள் உணருவதில்லை. இதை தடுக்க ரெயில்வே மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கும் சரியான பலன் கிடைக்கவில்லை.

மின்சார ரெயிலில் சாகச பயணம் என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அந்த வகையில், வாலிபர் ஒருவர் மின்சார ரெயிலில் உயிருக்கு ஆபத்தான வகையில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துறைமுக வழித்தடத்தில் சென்ற ரெயிலில் வெள்ளை சட்டை, பிரவுன் நிற பேண்ட் அணிந்து இருக்கும் அந்த வாலிபர் வாசற்படியில் நின்றபடி பயணிக்கிறார். ரெயில் கோவண்டி- செம்பூர் இடையே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது, தனது வலது கையால் வாசற்படி கம்பியை பிடித்து கொண்டு உடல் முழுவதையும் ரெயிலில் இருந்து வெளியே நீட்டி இடது கையில் தண்டவாளம் அருகே இருக்கும் ரெயில்வே மின்கம்பங்களை தொட்டு சாகசத்தில் ஈடுபடுகிறார்.

இதை யாரோ பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தடிவருகின்றனர்.

இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ஓடும் ரெயிலில் சாகசம் செய்த 68 பேரை கைது செய்து அபராதம் விதித்து உள்ளோம். ஆனாலும் ரெயிலில் சாகசம் செய்வது தொடரத்தான் செய்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com