சேலத்தில் கைக்குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண்

சேலத்தில் மது குடிக்க பணம் கேட்டு கணவர் தாக்கியதால் கைக்குழந்தையுடன் இளம்பெண் விஷம் குடித்தார்.
சேலத்தில் கைக்குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண்
Published on

சூரமங்கலம்,

சேலம் அருகே உள்ள சேலத்தான்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26), லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா (25). இத்தம்பதிக்கு 5 வயதில் பிரீத்தி என்ற மகளும், 1 வயதில் பவுசிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதனால், அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மனைவி புனிதாவிடம் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வா என்று, மணிகண்டன் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் மது குடிக்க மீண்டும் பணம் வாங்கிவரச்சொல்லி மணிகண்டன் தனது மனைவியை தொந்தரவு செய்ததுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மணிகண்டன் வெளியே சென்று விட்டார். மூத்த குழந்தையும் வீட்டில் இல்லை.
வீட்டில் கைக்குழந்தை பவுசிகாவுடன் இருந்த புனிதா மனவேதனையில் இருந்தார். கணவரின் கொடுமையில் இருந்து தவிப்பதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கைக்குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, புனிதாவும் விஷம் குடித்தார்.

இருவரும் வீட்டில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய மணிகண்டன், அங்கு மனைவி, குழந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தை பவுசிகா நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது தொடர்பாக சேலம் சூரமங்கலம் போலீசார், மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com